Friday, May 25, 2012

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?




”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை.
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.


நன்றி: -என்.கணேசன் (http://enganeshan.blogspot.in) & விகடன்

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !


 
நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.
தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.
பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.
பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் ! புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !
PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.
புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group  ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !
ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.
இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.
தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !
பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.
இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !
கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட்  சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !
புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !
புளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர். அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர். அதன் வெர்ஷன் 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.
எல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம். இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது ! அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
துவக்க காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் ரொம்பவே குறைவாய் இருந்தது. இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருப்பது கண்கூடு. ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப, இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல்  பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று ! இரண்டு கருவிகள் இப்படி இணைவதை “பெயரிங்” என்பார்கள், இதை புளூடூத்தின் “பாண்டிங்” நுட்பம் செயல்படுத்துகிறது.
எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது. அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.
புளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை. ரொம்பக் கம்மியான அளவு தான் என ஆதரவாளர்கள் கூறினாலும், உஷாராய் தேவையான நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்துவது நல்லது !
மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.


நன்றி : http://sirippu.wordpress.com